ஈ.சி.ஆர். சம்பவம் : 3 தனிப்படைகள் அமைப்பு

ஈ.சி.ஆர். சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது;

Update:2025-01-29 21:15 IST
ஈ.சி.ஆர். சம்பவம் : 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை,

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், அதற்கு நியாயம் கேட்க இளைஞர்கள் காரை நிறுத்த சொல்லியும் பெண்கள் காரை நிறுத்தாமல் சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் , ஈ.சி.ஆர். சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது . 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது .குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் கார்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

Tags:    

மேலும் செய்திகள்