புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு: அறநிலையத்துறை அதிகாரிகளுடன், தீட்சிதர்கள் வாக்குவாதம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடிமரத்தை மாற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

Update: 2024-11-04 02:15 GMT

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பட்டாச்சாரியர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய கொடிமரம் மாற்ற இன்று காலை வருகை தந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன், தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர். அறநிலையத்துறை துணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவிடம், முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி தீட்சிதர்கள் கேள்வி எழுப்பினர்.

கொடி மரத்தை தற்போது உள்ளதை போல் மாற்றுவதை எதிர்க்கவில்லை, புதிதாக வளையம் போன்றவை வைப்பதை எதிர்க்கிறோம் என்று தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

கொடிமரம் தற்போது உள்ள நிலையிலேயே திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என எழுத்து மூலமாக தீட்சிதர்களுக்கு ஒப்புதல் கடிதம் அளிக்க கோவிந்தராஜபெருமாள் கோவில் அறங்காவலர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்