விழுப்புரத்தில் 6 போலீசாருக்கு கட்டாய ஓய்வு

விழுப்புரத்தில் 6 போலீசாருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-03-23 08:47 IST
விழுப்புரத்தில் 6 போலீசாருக்கு கட்டாய ஓய்வு

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவே எக்கியார்குப்பத்தை சேர்ந்த சங்கர் (வயது 55), சுரேஷ் (49), தரணிவேல் (50) ஆகிய 3 பேர் இறந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி எக்கியார்குப்பத்தை சேர்ந்த ராஜமூர்த்தி (60), மலர்விழி (70), விஜயன் (55), கேசவவேலு (70), விஜயன் (55), ஆபிரகாம் (46), சரத்குமார் (55), மரக்காணத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி (47), சங்கர் (51) உள்பட 14 பேர் இறந்தனர்.

இதேபோல் மரக்காணம் பகுதியில் விற்பனை செய்த விஷ சாராயத்தை வாங்கி குடித்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் இறந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து 15 சாராய வியாபாரிகளை கைது செய்தனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக விஷ சாராய விற்பனையை தடுக்க தவறியதாக அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்- இன்ஸ்பெக்டர்கள், 2 போலீசார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதவிர சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்ட போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மரக்காணம் விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் 5 போலீசாருக்கு கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது ரோசனை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் வேலு, அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் செந்தில்குமார், கஞ்சனூர் போலீஸ்காரர் முத்துக்குமார், விக்கிரவாண்டி போலீஸ்காரர் குணசேகரன், சத்தியமங்கலம் போலீஸ்காரர் பிரபு, கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல்நிலைய காவலர் அருணன் உள்ளிட்ட 6 பேருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்