சென்னை கனமழை: மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட மாநகராட்சி

சென்னையில் இன்று 210 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2024-10-17 09:20 GMT

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 16 மி.மீ. மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த மரங்கள் எண்ணிக்கை 77; இதுவரை 77 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள். ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1,084 நபர்கள் அழைத்து வரப்பட்டு 16 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் உணவு சுகாதார வசதி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. நேற்று (16.10.2024) இரவு வரை 14,60,935 நபர்களுக்கும், இன்று (17.10.2024) காலை 23,800 நபர்களுக்கும் என மொத்தம் 14,84,735 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களிலும் இன்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. நீர் தேங்கியுள்ள 542 இடங்களில் 532 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 7,977 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. மழைக்காலத்தினை முன்னிட்டு பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 210 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை குடிநீர் வாரியம்:-

கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள் மற்ற மாநகராட்சி / நகராட்சி மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் சக்கர் இயந்திரங்கள் 89 எண்ணிக்கை. பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.

சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன் கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காலை 11 மணி வரை 1,205 நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவராண மையங்கள் மற்றும் 98 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்