ரூ.5,145 கோடியில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மேயர் பிரியா தாக்கல் செய்தார்
ரூ.5,145 கோடியில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்துள்ளார்.;

சென்னை,
2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அவை:
1. மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினி பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.
2. சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கு என தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.66 கோடி நிதி ஒதுக்கப்படும்.
3. சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காட்சி வழியாக பாடங்களை விளக்குவதால் அம்மாணவர்கள் அதனை எளிதில் புரிந்து கொண்டு, தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றிடும் வகையில் 81 பள்ளிகளுக்கு தலா 2 வீதம் 162 பெரிய அளவிலான மின்னணு பலகைகள் ரூ.64.80 லட்சம் செலவில் வழங்கப்படும்.
4. சென்னை பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் அவர்தம் ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு எம்.இ.பி.எஸ்.சி. சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.20 லட்சம் செலவிடப்படும்.
5. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 100 பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் வகுப்பறைகளில் (எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.) குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க ஏதுவாக அவ்வகுப்பறைகளின் சுவரில் வர்ணம் பூசுதல், விளக்கப்படங்கள், மரச்சாமான்கள் பொருத்துதல், வண்ணப்படங்கள் வரைதல், குழந்தைகள் அமர்வதற்காக பல வண்ணங்களில் வட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகள் ரூ.3 கோடியில் அமைத்து கொடுக்கப்படும்.
6. பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மயான பூமிகளில் உள்ள தகன மேடைகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏதுவாக ஜெனரேட்டர்கள் ரூ.15 கோடியில் நிறுவப்படும். மேலும், இவற்றிற்கு தேவையான எரிபொருள் கொள்முதல் செய்வதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்படும்.
7. தலைமையகம் மற்றும் 15 மண்டலங்களில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள் மற்றும் படிவங்களை ஆவணப்படுத்தி, பாதுகாத்து பராமரிக்க, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் பிறப்பு மற்றும் இறப்பு பிரிவுகள் ரூ.5 கோடியில் ஆவண காப்பகமாக மேற்படுத்தப்படும்.
8. முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என்.கார்டன், மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ஒரு மையத்துக்கு ரூ.30 லட்சம் வீதம் 3 மையங்களுக்கு ரூ.90 லட்சத்தில் முதியோர்களுக்கென தனிப்பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர், இயன்முறை சிகிச்சை நிபுணர் ஒருவர் மற்றும் 2 உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
9. பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கு மருந்து ரூ.3 கோடி செலவில் செலுத்தப்படும்.
10. பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து சுகாதார நிலையங்களில் உள்ள மருந்து காப்பாக அறைகளின் அளவுக்கு ஏற்ற வகையில் குளிரூட்டு வசதிகள் ரூ.3 கோடியில் செய்யப்படும்.
11. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.50 கோடியில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும்.
12. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்தூக்கி வசதிகள் ரூ.8 கோடியில் செய்யப்படும்.
13. மண்டலம் 1, 2, 3, 4, 5, 7, 8, 11, 13 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் கூடுதலாக வளர்ப்பு பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ரூ.15 லட்சத்தில் ஏற்படுத்தப்படும்.
14. மண்டலம் 10 கோட்டம் 141 கண்ணம்மா பேட்டையில் இயங்கி வரும் செல்லப்பிராணிகள் மருத்துவமனை வளாகத்தில் விபத்துகளினால் காயமடைந்த செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
15. வடசென்னையில் மூலக்கொத்தளம் மயான பூமியில் இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும்.