சென்னையில் ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு: ஏர்போர்ட்டில் இருவர் கைது
வட மாநில கொள்ளையர்கள் ஐதராபாத் தப்பி செல்ல முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.;

சென்னை,
சென்னையில் இன்று காலை மட்டும் ஒரே நாளில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள சாஸ்திரி நகரிலும் செயின் பறிப்பு நடந்துள்ளது. கிண்டி மைதானத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகை, சைதாப்பேட்டையில் பெண்ணிடம் 1 சவரன், வேளச்சேரி, பள்ளிக்கரணையிலும் தலா ஒரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் நடந்த 7 செயின் பறிப்பு சம்பவங்களில் 26 சவரன் நகைகள் பறிபோய் உள்ளன. அனைத்து சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டு இருக்கலாம், பைக்கில் வந்த 2 பேராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். பள்ளிக்கரணையில் இருந்து அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் சில மணி நேரத்தில் இந்த குற்றச் செயல்கள் அனைத்தும் அரங்கேறி இருப்பது அப்பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியில் தெரியவந்தது.
இதனிடையே செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை ஏர்போர்ட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஐதராபாத் தப்பி செல்ல முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.