தமிழகத்திற்கு சிறந்த விளையாட்டு ஊக்குவிப்பு விருது: உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநில விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

Update: 2024-12-04 12:36 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. 

தமிழ்நாடு அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்திடவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) இந்தியாவின் விளையாட்டினை மேம்படுத்தி வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் விளையாட்டு திறன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் உயர்த்துவதை உறுதிசெய்ய, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, முதலீடு போன்றவற்றில்இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு பங்களிக்கிறது. மேலும், விளையாட்டில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளால் இந்திய விளையாட்டு விருதுகள் 2024-ல், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாட்டின் சிறந்த பங்களிப்பைஇந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு அங்கீகரித்து, "விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்" என்ற விருதை தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.

இவ்விருதை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு விளையாட்டு குழு மற்றும் ஜி.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.கே.எஸ்.வி.சாகர் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு விளையாட்டு குழுவின் இணை தலைவர் முனைவர் அமித் பல்லா ஆகியோர் வழங்கினர். இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த விருதினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்