நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொடுத்தது.;

சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல் தொடங்கி நடபெற்று வருகிறது. அப்போது 3 அமைச்சர்கள் மீது அதிமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு, தீர்மானம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது பரிசீலனையில் உள்ளது. இன்றைக்கு மற்ற அலுவல்கள் இருப்பதால், அதை விவாதத்திற்கு எடுக்க முடியாது என தெரிவித்தார். சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்து சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மட்டும் அவையின் உள்ளே இருக்கிறார். பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் கால்வாய்களை சீரமைப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசி வருகிறார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக சார்பில் பேரவையில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தரமறுத்ததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது என்றார்.