நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-11-04 18:49 GMT

கோப்புப்படம்

சென்னை,

நூறு நாள் வேலைத் திட்டத்தில் போலியான கணக்குகளை காட்டி மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நூறு நாள் வேலைத்திட்டத்தின்கீழ் நடைபெற்ற மோசடிகள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வின் படி 2023-24ம் நிதியாண்டில் நடைபெற்ற மொத்த மோசடியான 35 கோடி ரூபாயில், 34 கோடி ரூபாய் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் இறந்தவர்கள், கிராமத்தில் இல்லாதவர்கள், வெளியூர் வாசிகள், வடமாநிலத்தவர்கள் என வேலைக்கு சம்பந்தமில்லாதவர்களின் பெயர்களை கணக்கு காட்டி மோசடி நடைபெறுவதாக அடிக்கடி ஏற்படும் புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியமாக எதிர்கொள்வதே இது போன்ற மோசடிகள் அதிகரிக்க முக்கிய காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, நூறு நாள் வேலைத் திட்டத்தில் போலியான கணக்குகளை காட்டி மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் அத்திட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி முறைகேடுகளை தவிர்ப்பதோடு தகுதியான பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்