அரசியல் களத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும்: விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

த.வெ.க. தலைவர் விஜய்க்கு, ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார் .

Update: 2024-10-27 04:46 GMT

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர். கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு வி.சி.க. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அதன் தலைவர் சகோதரர்விஜய் தலைமையில் இன்று விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது. மாநாட்டு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முகப்புகளில் தமிழ்நாடு அரசியலின் கொள்கை ஆசான் தந்தை பெரியார், இந்திய அரசியலின் அடையாளம் புரட்சியாளர் அம்பேத்கர், மக்கள் தலைவர் பெருந்தலைவர் காமராசர், அடிமைத்தனத்தை எதிர்த்த வீர பெண் களப்போராளிகள் வேலுநாட்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையையும், உறுதியான லட்சிய அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தை இதன் வழி அமைத்துக் கொள்வதன் மூலம் கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், அவரது இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் விஜய்யை வாழ்த்தி வரவேற்கிறேன்.என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்