டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகியுள்ளனர்.;

சென்னை,
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 20-ம் தேதி நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும். இந்த வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கிறோம். அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது'' என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர்.