மே, ஜூன் மாத பொருட்களை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்

மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Update: 2024-06-27 15:53 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழக சட்டசபையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் இன்று நடைபெற்றது.

விவாதம் முடிந்ததும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், "தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்களில் 9 ஆயிரத்து 784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு ரேசன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்படும்.

கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் தற்போது 9 ஆயிரத்து 182 ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும்.

கடந்த மே மாதத்திற்கான 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி ஏப்ரல் 8-ந் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டு ஏப்ரல் 17-ந்தேதி தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டது.

ஏப்ரல் 18-ந் தேதி மே மாதத்திற்கான 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பத்திரிகைகளில் விளம்பர அறிவிக்கை வெளியிடப்பட்டன. மே மாதத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் மே 2-ந் தேதி அன்று திறக்கப்பட்டு மே 6-ந் தேதி அன்று தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களுடன் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு மே 12-ந் தேதி அன்று பாமாயில் ஒப்பந்ததாரர்களுக்கும் மே 13-ந் தேதி அன்று துவரம் பருப்பு ஒப்பந்ததாரர்களுக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

அதன்படி மே மாதத்திற்கான பாமாயில் பாக்கெட்டுகள் அனைத்து அங்காடிகளுக்கும் 100 சதவீதம் வழங்கப்பட்டன. துவரம் பருப்பினைப் பொறுத்தவரையில் மே மாத ஒதுக்கீடான ஒரு கோடியே 89 லட்சத்து 89 ஆயிரம் கிலோவில் ஒரு கோடியே 68 லட்சத்து 25 ஆயிரம் கிலோ, அதாவது 88 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் மாதத்திற்கான 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்திட ஒப்பந்தப்புள்ளி கோருவதற்காக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி மே 7-ந்தேதி அன்று அரசால் கடிதம் அனுப்பப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மே மாதம் 27-ந் தேதி அன்று அனுமதி பெறப்பட்டது. அதனையடுத்து, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்குரிய விளம்பர செய்தி தினசரி பத்திரிகைகளில் மே 28-ந்தேதி அன்று பிரசுரம் செய்யப்பட்டது.

அதற்குரிய ஒப்பந்தப்புள்ளியானது ஜூன் 8-ந் தேதி அன்று திறக்கப்பட்டன. அதன் பிறகு ஜூன் 11-ந் தேதியன்று தகுதியுள்ள துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு 13 ஆயிரம் டன் கனடா மஞ்சள் பருப்பு கொள்முதல் செய்வதற்கு 3 ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் ஒரு கோடியே 10 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்கு 4 ஒப்பந்ததாரர்களுக்கும் ஜூன் 13-ந்தேதி அன்று கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு மேலும் கூடுதலாகத் தேவைப்படும் துவரம் பருப்பினைப் பெறும் விதமாக ஏற்கனவே மே மாதத்திற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்ட துவரம் பருப்பு 4 ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதலாக 25 சதவீதத்துக்கு உரிய 3 ஆயிரத்து 750 டன் துவரம் பருப்பிற்கான கொள்முதல் ஆணைகள் ஜூன் 15-ந் தேதி அன்று வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தவிர, மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டு அளவினை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்