கள் விற்பனைக்கான தடையை நீக்குவது குறித்து ஏன் பரிசீலிக்கக்கூடாது? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
29ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் முரளிதரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டாஸ்மாக் கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், ஆனால் குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் மட்டும் கிடைப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாகவும், மதுபானங்களை ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன், கள் விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மதுபானங்களை ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கக்கூடாது என கேள்வியெழுப்பினர். அத்துடன், இது தொடர்பாக ஜூலை 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.