ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் - ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு

ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம் என தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-06-06 03:48 GMT

சென்னை,

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்த கடைசி நாடாளுமன்ற தேர்தல் ஆகும். அந்த தேர்தலில் 'இந்த லேடியா? அல்லது மோடியா?' என்ற அவரது பிரசார முழக்கம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. அதோடு 44 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தது.

அதன்பின் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. சந்தித்த 2019 மற்றும் தற்போதைய 2024-ம் ஆகிய 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பா.ஜனதா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்தது. அதில் அ.தி.மு.க. 20 இடங்களில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 19.39 சதவீத வாக்குகள் தான் கிடைத்தது.இதுதான் அ.தி.மு.க. வரலாற்றில் அந்த கட்சிக்கு கிடைத்த குறைந்தபட்ச வாக்கு சதவீதம் ஆகும்.

அதே போல் இந்த தேர்தலில் அ.தி.முக., தே.மு.தி.க. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. மொத்தம் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இந்தநிலையில், அ.தி.மு.க. அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். "தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்னும் புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்.

நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்