பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு பிடிவாரண்ட்

10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-04 15:29 GMT

சென்னை, 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து விடுதலைக்காக போராடியவர் திருவள்ளூரைச் சேர்ந்த தியாகி வேலு (வயது 97). இவர் 2021-ம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், இவர் ஓய்வூதியம் கேட்டு 1987-ம் ஆண்டு விண்ணப்பித்தார். விண்ணப்பித்த நாளில் இருந்து ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், சுதந்திர போராட்ட வீரர் வேலுவுக்கு 1987-ம் ஆண்டு விண்ணப்பம் செய்தததற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனாலும், 2008-ம் ஆண்டு அவர் ஒரு விண்ணப்பத்தை அளித்ததற்கு ஆதாரம் உள்ளது. எனவே, 2008-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான ஓய்வூதிய பாக்கி தொகையை கணக்கிட்டு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்தாததால், சுதந்திர போராட்ட வீரர் வேலு கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ''ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கியும் இதுவரை ஓய்வூதிய பாக்கித் தொகையை பொதுத்துறை கூடுதல் செயலாளர் அந்தோணிசாமி வழங்கவில்லை. எனவே, அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கிறேன். விசாரணையை 8-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்