விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 'மைக்' சின்னத்தில் போட்டி - சீமான்
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. ஒட்டுமொத்த அரசாங்கமே அதில் செயலாற்றுகிறது. அத்தனை விதிமீறல்களும் அரங்கேறுகிறது. எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. சொல்லும் காரணங்களில் நான் உடன்படுகிறேன். ஆனால் இதே அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்களில் என்னென்ன முறைகேடுகளை செய்தது என்பதனை மக்கள் மறக்கவில்லை. எனவே தேர்தலை புறக்கணிப்போம் என்று அவர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்து போட்டியிடுகிறது. மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில்தான் போட்டியிட முடிவு செய்து இருக்கிறோம். இந்த தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சிக்கு என்று தனி சின்னம் கேட்போம். அதில் முதலில் நாங்கள் கேட்க போவது புலி சின்னம் தான். இந்த சின்னத்தை எங்களுக்கு தர தேர்தல் ஆணையம் ஏற்கனவே மறுத்து விட்டது. புலி, தேசிய சின்னம் என்பதால் தரமுடியாது என்று கூறுகிறது. அப்படியென்றால் தேசிய மலரான தாமரையை எப்படி பா.ஜனதா கட்சிக்கு கொடுத்தார்கள்.
ஒருவேளை புலி சின்னம் கிடைக்காத பட்சத்தில் விவசாயி சின்னம் கேட்டு பெறுவோம். ஆனால் முன்பு வைத்து இருந்த கரும்பு விவசாயி சின்னம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம். எனவே வேறு ஒரு விவசாயி சின்னம் கேட்டு பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.