வள்ளலார் சர்வதேச மைய விவகாரம்: கடலூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று கடலூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தமிழக அரசு சார்பில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்பாளர்களின் தூண்டுதலின் பேரில் தான் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வழிபாட்டுத் தலங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள 27 ஏக்கரை அடையாளம் காண சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடலூர் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை செப். 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.