தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இரு வாலிபர்கள் பலி

2 வாலிபர்கள் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-07-02 03:58 IST

திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு சலவைப்பட்டறை அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்று ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் இறந்து கிடந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(வயது 28), அதே ஊரை சேர்ந்த சரவணபவா(27) என்பதும், இவர்கள் இருவரும் திருப்பூர் அருகே காவிலிபாளையம் புதூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்ததும், நேற்று அதிகாலை டீக்கடைக்கு வந்து டீ குடித்துவிட்டு, காலைக்கடன் கழிக்க சென்ற இவர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயிலில் அடிபட்டு வாலிபர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில்  பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்