சுரங்கம் தோண்டும் பணி நிறைவு - சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update: 2024-10-09 16:20 GMT

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் பாலாறு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்தது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் 2ம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. வழித்தடம் 3-இல், சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் செப்டம்பர் 2023-இல் சிறுவாணி மற்றும் பாலாறு என்ற இரண்டு சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 708 மீட்டர் ஆகும். சுரங்கம் தோண்டும் எந்திரம் சிறுவாணி ஆகஸ்ட் 2024-இல் (downline) ஸ்டெர்லிங் சாலையை வெற்றிகரமாக வந்தடைந்தது. இதற்கிடையில், சுரங்கம் தோண்டும் என எந்திரம் பாலாறு 2024 ஜனவரியில் (upline) சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு இன்று (அக். 9) ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு பூமிக்கு அடியில் களிமண், மணல் மற்றும் பாறை பிரிவுகளையும், மேலும், சேத்துப்பட்டு மாநகராட்சி பள்ளி, சேத்துப்பட்டு தோபி காட், கருகாத்தம்மன் கோவில் மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.

இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும் சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் செயல்பாடுகளை அறியாமலே இருந்தனர், இது வேலையின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக சுரங்கப்பாதைக்கு மேலே 6 மீட்டர் களிமண்ணுடன் 52 மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றின் அடியில் கடந்தது சவாலாக இருந்தது. இந்த நுட்பமான செயல்பாடு குறைபாடற்ற முறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. மேலும், இந்த சுரங்கப்பாதை பணிகளை முடிக்க 260 நாள்கள் ஆனது, இது சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 பணிகளின் தற்போதைய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்