2 மணிநேரம் வானத்திலேயே வட்டமடித்த திருச்சி-சார்ஜா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

தொழில் நுட்ப கோளாறால் 2 மணிநேரம் வானத்திலேயே வட்டமடித்த திருச்சி-சார்ஜா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது. இதனால், விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Update: 2024-10-11 15:00 GMT

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதனால், விமானம் தொடர்ந்து வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது. விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு அதன்பின்னர், தரையிறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஒருபுறம் சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனால், விமானத்தில் 2 மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் தவித்து வருகின்றனர். விமானம் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. இந்நிலையில், விமானம் 8.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதனால், விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து சென்ற பயணிகள் பலர் விமானத்தில் இருந்து உள்ளனர். அவர்கள் சார்ஜாவுக்கு பணிக்கு செல்வதற்காக விமானத்தில் பயணித்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

விமானம் தரையிறங்கிய பிறகு பயணிகள், சுமார் 30 நிமிடம் விமானத்தில் அமர வைக்கப்பட்டனர். அவர்கள் விமானத்தில் அமர வைக்கப்பட்டபோதும், பின்னர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு குடிநீர் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்தவிதமான உணவோ, தேனீரோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு, சிங்கப்பூரிலிருந்து நாளை காலை 3.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை மாற்று விமானமாக ஏற்பாடு செய்து, அவர்களை ஷார்ஜாவிற்கு அனுப்பி வைக்கும் பணியினை அதிகாரிகள் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்