தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் - தி.மு.க. கடிதம்
தபால் வாக்கு விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க. கடிதம் எழுதியுள்ளது.;
சென்னை,
7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது. அன்றே யார் வெற்றியாளர் என அறிவிக்கப்பட உள்ளது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் அதனை தொடர்ந்து வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதற்கிடையே தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு தி.மு.க. கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;
" தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையரின் செய்திக்குறிப்பு உள்ளது. இது சரியான நடைமுறை இல்லை என்று தோன்றுகிறது. இந்த அறிக்கை, வாக்கு எண்ணும் முகவர்களின் மனதில் கணிசமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
வாக்குகள் எண்ணும்போது முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வாக்கு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ண வேண்டும். தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்க கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவருக்கும் வழிகாட்டுதல்களையும், அதற்கான பொது விளக்கத்தையும் அளிக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.