அரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்கு காரணம் - இயக்குனர் பா.ரஞ்சித்

தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவே கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-20 09:38 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்