தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதை முதல்-அமைச்சர் நிரூபித்துள்ளார் - தமிழக அரசு பெருமிதம்

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-07-03 06:27 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நலனில் தனி முக்கியத்துவமும், தனி கவனமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தி வருபவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 20.6.2024 முதல் 29.6.2024 வரை ஒன்பது நாட்கள் காலை, மாலை இரு வேளையும் தமிழ்நாடு சட்டசபை கூடி மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று ஒவ்வொரு துறை சார்ந்தும் முக்கிய பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் பயன்கள் தந்திடும் சில முக்கிய அறிவிப்புகளைச் சட்டசபை விதி 110-ன் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

450 கோடி மதிப்பீட்டில் 10,000 கிலோ மீட்டர் நீள கிராமச் சாலைகள் மேம்பாடு; 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள்; ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம்; திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக சேதாரம் அடைந்துள்ள 6,746 அடுக்குமாடி குடியிருப்புகளை 1,149 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்தல் ஆகிய முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்புகளுக்கும் வழிவகை செய்துள்ளார்.

இதன்மூலம் எப்பொழுதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்