கல்வி தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: தமிழக அரசு பெருமிதம்

கல்வி தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

Update: 2024-09-10 07:28 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்:-

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும். தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள். ஆய்வகங்கள். கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், மாணவ/மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் 2022-2023ம் நிதியாண்டில் நபார்டு கடனுதவித் திட்டம் RIDF XXVIII-ன் கீழ் ரூ.813 கோடி செலவில் 418 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள், 57 ஆய்வகங்கள், 10 மாணவ/மாணவிகள் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்:-

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் 25.8.2023 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 15.7.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தினர்.

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் 3,238 வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 21 அறிவியல் ஆய்வகங்கள், உட்கட்டமைப்புகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன. ரூ.551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள். ரூ.436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்.

மத்திய அரசின் உயர்கல்வித்துறை மந்திரியின் பாராட்டு:-

புதுடெல்லியில் 13.8.2024 அன்று மத்திய அரசின் உயர்கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள செய்திகள் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் மேலும் உயர்த்தியுள்ளன.

அதாவது, தேசிய அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லியில் 88 கல்லூரிகள், மகாராஷ்டிரத்தில் 30 கல்லூரிகள், கர்நாடாகாவில் 78 கல்லூரிகள், உத்தரப்பிரதேசத்தில் 71 கல்லூரிகள், அசாம் மாநிலத்தில் 15 கல்லூரிகள், மத்தியப் பிரதேசம், சண்டிகர், ஜார்கண்ட் ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் எனத் தரவரிசைப்படுத்தப்பட்டு உயர்கல்வியில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவுத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்