தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-07-29 15:02 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டமானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதன்படி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகளை கட்டுப்படுத்த திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால் , அவருடைய புதிய திரைப்படங்களுக்கான பணிகளை தொடங்கும் முன்பு தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகு, ஓ.டி.டி.-யில் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

பல திரைப்படங்கள், திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கிக் கிடப்பதாகவும், அந்த நிலையை மாற்ற புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின் படப்பிடிப்புகளை ஆரம்பிக்கலாம் என்பதால், ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு புதிய திரைப்படங்களுக்கான ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு தொடர்பான பணிகளை நிறுத்துவது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்படி நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல் நவ.1ந்தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், திரைத் தொழிலாளர்களை பாதிக்கும் தன்னிச்சையான இந்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், நட்புறவு பாதிக்காமல் பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வர வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்