தூக்கில் பிணமாக தொங்கிய அக்காள்-தங்கை... கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

அக்காள் - தங்கை இருவரும் பால் வியாபாரம் செய்து வந்தனர்.

Update: 2024-07-18 21:59 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் கிராமத்தை சோ்ந்தவர் மணிமாறன் மனைவி பழனியம்மாள் (வயது 60). இவருக்கு யுவராஜ், ஸ்ரீவினோத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் யுவராஜ் வெளிநாட்டில் வசித்து வருகிறார். ஸ்ரீவினோத் ராயப்பனூரில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பழனியம்மாளின் அக்காளான பூசப்பாடியை சோ்ந்த செல்லப்பன் மனைவி செல்லம்மாள் (75) என்பவர், தனது கணவரை பிரிந்து கடந்த 50 ஆண்டுகளாக பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். அக்காள் தங்கையான செல்லம்மாளும், பழனியம்மாளும் மாடுகளை வளர்த்து வருவதோடு, பால் வியாபாரமும் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஆடி மாத பிறப்பையொட்டி இரவில், வீட்டில் உள்ள அனைவரும் தேங்காய் சுட்டு சாப்பிட்டுள்ளார்கள். பின்னா் ஸ்ரீவினோத் தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். பழனியம்மாளும், செல்லம்மாளும் அவா்களுடைய வீட்டிற்கு தூங்க சென்றனர்.

நேற்று அதிகாலையில் பால் வாங்குவதற்காக சிலர் பழனியம்மாளின் வீட்டு கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்காததால், அருகில் உள்ள ஸ்ரீவினோத்தின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். இதையடுத்து அவர் பழனியம்மாள் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, அவா்கள் 2 பேரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடி பாா்த்தபோது, வீட்டின் எதிர்புறம் உள்ள பழைய வீட்டில் பழனியம்மாளும், செல்லம்மாளும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தனர். இதைபாா்த்த ஸ்ரீவினோத் கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னா் அவா்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீவினோத் கொடுத்த புகாரின்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாள், செல்லம்மாள் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது அவா்களை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அக்காள்-தங்கை தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்