கைக்கு வந்த ஆவணங்கள்... காத்திருந்த செந்தில் பாலாஜி: 47 வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல்

செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

Update: 2024-07-16 11:28 GMT

கோப்புப்படம்

சென்னை,

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக வங்கியின் கணக்கு தொடர்பாக ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை வங்கிக்கு அனுப்பிய கடிதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி அந்த ஆவணங்களை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த ஆவணங்களை பெறுவதற்காக செந்தில் பாலாஜியை இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தும்படி சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிடிருந்தார். இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு அந்த வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது.

இந்த சூழலில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணக்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதாகவும், தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, இவ்விரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47-வது முறையாக நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்