விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை

விஷ சாராய மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குடன், பா.ம.க. வழக்கையும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-25 23:56 GMT

கோப்புப்படம்

சென்னை,

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குடன், பா.ம.க. வழக்கையும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. செய்தி தொடர்பாளரும், சமூக நீதி வக்கீல்கள் பேரவையின் தலைவருமான வக்கீல் கே.பாலு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு வரை பூரண மதுவிலக்கு மாநிலமாகத்தான் இருந்தது. அதன் பின்னர், சாராயம், கள்ளு, வெளிநாட்டு மதுவகைகள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது, அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதுவும் மதுபான கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து கடந்த 23ம்தேதி வரை 57 பேர் இறந்துள்ளனர். 169-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விஷ சாராய மரணத்தை கள்ளக்குறிச்சி முன்னாள் கலெக்டர் மறைப்பதற்கு முயற்சித்துள்ளார். முதல் நபர் இறந்தபோது, அவருக்கு குடிபழக்கமே இல்லை. விஷ சாராயம் குடித்து இறக்கவில்லை. அதனால், பொய் செய்தி பரப்பாதீர்கள் என்று பேட்டிக் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். மேலும், இந்த சாராயத்தை விற்பனை செய்தவர்கள், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மெத்தனால் வாங்கி வந்துள்ளனர். அதனால், அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம், தமிழ்நாடு போலீஸ் வெளிமாநிலத்துக்கு சென்று விசாரணை நடத்த முடியாது,

எனவே, விஷ சாராயம் மரணம் குறித்து சி.பி.ஐ. அல்லது, சிறப்பு புலனாய்வு முகமையை கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். இந்த விஷ சாராய மரணத்துக்கு காரணமான அதிகாரிகளை அடையாளம் காணவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடவேண்டும். மேலும், விஷ சாராயம் குடித்தவர்களை காப்பாற்றும், விஷ முறிவு மருந்தை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இருப்பு வைக்கவும் உத்தரவிடவேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கே.பாலு ஆஜராகி, "இந்த விஷ சாராயத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கோர்ட்டு வாசலில் வைத்து குடித்து, கோர்ட்டு வளாகத்தை சுற்றி குடித்தவர்கள் சுருண்டு விழுந்து இறந்துள்ளனர். அதனால், இந்த வழக்கு விசாரணையை ஐகோர்ட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், "இந்த சம்பவம் தொடர்பாக அ தி மு க தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின்படி, அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். நிலை அறிக்கை தயாராக உள்ளது" என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பா.ம.க. தொடர்ந்துள்ள இந்த வழக்கை, அ.தி.மு.க. வழக்குடன் சேர்த்து இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்