ஓசூர் அருகே மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி - மயக்கம்
ஓசூர் அருகே மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குடித்த 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேக்கர் நகர் குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரை குடித்த, 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதித்தது. வாந்தி - மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மாநகர நல அலுவலர் தலைமையில் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.