போதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற பாடலில், 'கல்வி சிறந்த தமிழ்நாடு', 'புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு', 'வேதம் நிறைந்த தமிழ்நாடு', 'உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு' எனத் தமிழ்நாட்டின் பெருமையை இந்த உலகிற்கு எடுத்துரைத்த மகாகவி பாரதியார் பிறந்த தமிழ் மண், இன்று போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே என்று சொன்னால் அது மிகையாது. பெருமை மிகுந்த தமிழ்நாட்டை போதை மிகுந்த நாடாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் மூன்று ஆண்டு கால சாதனை.
கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது என நான் பல முறை எனது அறிக்கைகளின் வாயிலாகவும், பேட்டிகளின் வாயிலாகவும் தெரிவித்திருக்கிறேன். பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதனைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால், இதனைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் தி.மு.க அரசால் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலகஅணி துணை அமைப்பாளர் கைது செய்யப்பட்டு, அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதன்மூலம் தி.மு.க.வினர் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தச் சூழ்நிலையிலும், போதைப் பொருட்கள் விற்பனை என்பது தமிழ்நாட்டில் அமோகமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்று நான் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இதனைக் கட்டுப்படுத்த தி.மு.க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தற்போது தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்களின் குடியிருப்புகள் மற்றும் வெளி மாநில மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் நேற்று முன்தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனையிட்டதில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாகவும், உள்ளூர் ரவுடிகள் மாணவர்களிடம் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும், இதனைக் கட்டுப்படுத்துவது மிகுந்த சிரமமாக இருக்கிறது என்று காவல் துறையினர் தெரிவிப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக, மாணவ, மாணவியரை கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காவல் துறை அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
'முளையிலேயே கிள்ளி எறி' என்ற பழமொழிக்கேற்ப காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால், போதைப் பொருட்களின் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இதனைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. திமுக அரசின் இந்தச் செயல் தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
போதை மிகுந்த தமிழ்நாடு, கல்வி சிறந்த தமிழ்நாடாக மாறவேண்டுமெனில், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் தனியார் குடியிருப்புகளில் வாடகைக்கு தங்கியிருந்தால் அந்தக் குடியிருப்புகளை மேற்பார்வையிடவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் அனைத்து வாகனங்களை சோதனையிடவும், உள்ளூர் வாகனங்களின் நடமாட்டத்தை அவ்வப்போது கண்காணிக்கவும், வனப் பகுதிகள் உட்பட மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அடிக்கடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் போர்க்கால அடிப்படையில் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து, போதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.