கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - தங்கம் தென்னரசு

'முதல்வர் மருந்தகம்' திட்டம் வரும் பொங்கல் திருநாள் அன்று அமலுக்கு வருமென அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.;

Update:2024-08-15 10:30 IST

சென்னை,

சுதந்திர தின உரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக 'முதல்வர் மருந்தகம்' திட்டம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் வரும் பொங்கல் திருநாள் அன்று அமலுக்கு வரும். இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும்.

ஓய்வுபெற்ற படை வீரர்களுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்க வழிவகை செய்யப்படும். கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 20,000-ல் இருந்து 21,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 11,000-ல் இருந்து 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன்,வ.உ.சி, மருது சகோதரர்களின்  வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ,10,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அரசின் சார்பில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கவர்னர் அழைத்துள்ள விருந்தில் அமைச்சர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார்கள். கவர்னரின் கருத்தியல் சார்ந்த விஷயங்களில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளது. ஆனால் கவர்னர் என்ற பதவிக்கு முதல்-அமைச்சர் மதிப்பு வைத்துள்ளார். எனவே கவர்னரின் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் கவர்னரின் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்