கடலுக்கு அடியில் ராமர் பாலம்: துல்லியமான வரைபடத்தை வெளியிட்டது இஸ்ரோ

ராமர் பாலம் கடந்த 1480-ம் ஆண்டு வரை தண்ணீருக்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது.

Update: 2024-07-10 02:13 GMT

சென்னை,

'இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் இருக்கும் ராமர் பாலத்தின் விரிவான வரைபடத்தை உருவாக்கி உள்ளனர்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

இந்தியாவின் ராமேசுவரம் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னாரின் வடமேற்கு முனை வரை ராமர் பாலம் பரவியுள்ளது. ராமர் பாலம் அல்லது ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ராமேசுவரம் தீவுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இது நீருக்கடியில் உள்ள மலைமுகடு, சுண்ணாம்புக் கற்களின் சங்கிலியால் ஆனது. இதிகாசமான ராமாயணத்தில், சீதையை ராமன் மீட்பதற்காக ராவணனுடன் போரிடுவதற்காக இலங்கையை அடைய ராமரின் படையால் கட்டப்பட்ட ராமர் சேது என இது விவரிக்கப்பட்டுள்ளது. ராமரின் காலத்தால் அழியாத கதையில் பாலம் மையமாக இருப்பதால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பா? என்பதை கண்டறிய கடந்த காலங்களில் பல ஆய்வுகள் உள்ளன.

இதற்கிடையே அமெரிக்க நாசாவின் ஐ.சி.இ.சாட்-2 லேசர் அல்டிமீட்டரை கொண்ட செயற்கைக்கோள், கடலின் ஆழமற்ற பகுதிகளில் நீரில் ஊடுருவும் போட்டான் அல்லது ஒளித் துகள்களை தண்ணீரில் ஊடுருவ செய்து, நீரின் அடியில் உள்ள எந்தவொரு கட்டமைப்பையும் படம் எடுக்கும் சக்தி படைத்தது.

இந்த செயற்கைக்கோள் எடுத்த ராமர் பாலம் தொடர்பாக பெறப்பட்ட தரவுகளை பயன்படுத்தி, இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ராமர் பாலத்தின் மிக விரிவான வரைபடத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தொலையுணர்வு மையத்தின் ஜோத்பூர் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ராமர் பாலம் பற்றிய பல நுணுக்கமான விவரங்களை கண்டறிய நாசா செயற்கைக்கோள் எடுத்த படங்களை ஆய்வு செய்தனர். அவர்களின் ஆராய்ச்சியின் படி பாலத்தின் 99.98 சதவீத பகுதிகள் ஆழமற்ற மற்றும் மிக ஆழமற்ற நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. குறிப்பாக 29 கி.மீ. நீளம் கொண்ட ராமர் பாலம், கடற்பரப்பில் இருந்து 8 மீட்டருக்கு கீழே இருப்பதை வரைபடமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

மிக ஆழம் குறைந்த பகுதியில் பாலம் இருப்பதால் கப்பல்கள் மூலம் சென்று அப்பகுதியை ஆய்வு செய்ய முடியாது. அத்துடன், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திக்கு இடையே 2-3 மீட்டர் ஆழம் கொண்ட 11 குறுகிய கால்வாய்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அத்துடன் புவியியல் சான்றுகள், இந்தியா மற்றும் இலங்கையின் தோற்றம் நெருங்கிய தொடர்புடையது என்று தெரியவருகிறது.

கி.பி. 9-ம் நூற்றாண்டில், பாரசீக கடற்படையினர் இந்த அளவை 'சேது பந்தாய்' அல்லது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கடலில் உள்ள பாலம் என்று குறிப்பிட்டு உள்ளனர். கடந்த 1480-ம் ஆண்டு வரை பாலம் தண்ணீருக்கு மேல் இருந்ததாகவும், புயலின்போது நீரில் மூழ்கியதாகவும் ராமேசுவரத்தில் இருந்து கோவில் பதிவுகள் தெரிவிக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்