வாடகை வீடு விவகாரம் : நடிகர் தனுசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு

வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார்.

Update: 2024-06-14 01:19 GMT

சென்னை,

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் மிகப்பெரிய பங்களா வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டையும் அவர் வாங்கியுள்ளார். இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அஜய்குமார் லூனாவத் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எனது வீட்டுக்கு வந்த சிலர், இந்த வீட்டை நடிகர் தனுஷ் விலைக்கு வாங்கி விட்டார். எனவே உடனடியாக வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று மிரட்டினர். ஆனால், வீட்டுக்கான வாடகை ஒப்பந்தம் அமலில் இருந்ததால், உடனடியாக வீட்டை காலி செய்ய மறுத்தேன். அதனால், வீட்டின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். நான் முறையாக வாடகை செலுத்தி வருகிறேன்.

எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென ஏராளமான நபர்கள் வந்து வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படி வற்புறுத்தியது சட்டவிரோதமானது. எனவே, இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு நடிகர் தனுஷ் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுஷ் காணொலி காட்சி மூலமாக விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். அவர் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், இந்த வீ்டு காலி செய்யும் விவகாரத்தில் இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டது. கடந்த மே 31-ந்தேதி அந்த வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று கூறினார். இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் தனுசுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்