தேனி: கம்பம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை - வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக வனத்துறையினர் தகவல்

சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற வழித்தடத்தினை வனத்துறையினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-08-25 03:11 GMT

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம் அருகே வனப்பகுதிக்குள் இருந்து வந்த சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வனச்சரகர் (பொறுப்பு) சுந்தரேஸ்வரன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அந்த புதர் பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது வனக்காப்பாளர் ரகுராம் பாண்டியன் தன் கையில் வைத்திருந்த லத்தியால் புதரில் தட்டி பார்த்தார். அப்போது அந்த புதரில் இருந்த சிறுத்தை மீது லத்தி பட்டதாக தெரிகிறது. உடனே ஆக்ரோஷமாக புதரில் இருந்து வெளியே பாய்ந்த சிறுத்தை ரகுராம் பாண்டியனை தாக்கியது. இதனை பார்த்து அங்கு இருந்த வன ஊழியர்கள் கூச்சலிட்டதால் சிறுத்தை புதருக்குள் சென்று பதுங்கியது.

சிறுத்தை தாக்கியதில் தலையில் காயம் அடைந்த ரகுராம் பாண்டியனை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அங்கு விரைந்து வந்து சிறுத்தையை தேடுவதில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த பகுதியில் பொதுமக்கள் செல்வதை தடு்த்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

இதற்கிடையில் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். கம்பம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து சமூக வலைத்தளத்தில் தகவல் வேகமாக பரவியது. இதையறிந்த பொதுமக்கள் சிறுத்தையை பார்க்க அங்கு குவிந்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் வரை அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று இரவு வனத்துறையினரை முற்றுகையிட்டனர். அப்போது சிறுத்தையை பிடிக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த சூழலில் கம்பம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை இன்று அதிகாலை வனப்பகுதியை நோக்கி சென்றுவிட்டதால், அதனை பிடிக்கும் பணியை வனத்துறையினர் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற வழித்தடத்தினை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்