திருவான்மியூரில் பயங்கரம்: வக்கீல் ஓட, ஓட வெட்டிக்கொலை - 3 பேர் கைது

வக்கீல் கவுதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-12 23:29 GMT

சென்னை,

சென்னை திருவான்மியூரில் முன்விரோதம் காரணமாக வக்கீல் ஒருவர் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவான்மியூர் அவ்வைநகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 24). திருமணமாகாத இவர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வக்கீல் கவுதம், திருவான்மியூர் திருவள்ளுவர் சாலையில் அவருடைய நண்பர்கள் சிலருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நாலைந்து பேர் கொண்ட கும்பல், வக்கீல் கவுதமை திடீரென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத கவுதம் நிலைக்குலைந்து தப்பி ஓடினார்.

ஆனால் அந்த கொலை வெறி கும்பல் விடாமல் விரட்டிச்சென்று கவுதமை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் கவுதம் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். பின்னர் வெறி ஆட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கவுதம், அடையாறு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். வெட்டுக்காயங்கள் பலமாக இருந்ததால், கவுதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், நீலாங்கரை உதவி கமிஷனர் பரத் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலையான கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர்.

அதன்படி, கண்ணகி நகரைச் சேர்ந்த கமலேஷ் (27), அவருடைய நண்பர்கள் கொட்டிவாக்கம் நித்யானந்தம் (27), பெரும்பாக்கம் பார்த்திபன் (31) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கவுதமை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து முக்கிய குற்றவாளி கமலேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

வக்கீல் கவுதமும், நானும் நண்பர்களாக பழகி வந்தோம். கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் ஒன்றாக வசித்து வந்தோம். அதில் இருந்து நாங்கள் உயிருக்கு உயிராகத்தான் பழகினோம். என்னை விட்டு பிரிந்து திருவான்மியூர் சென்ற பிறகு, கவுதமின் நடவடிக்கைகள் வேறு விதமாக இருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களோடு அவர் பழகினார். பாலவாக்கத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் எனது உறவினர் பிரபுவை குடிபோதையில் தாக்கினார். இதனை நான் தட்டிக்கேட்டேன். இதனால் எனக்கும், மதன்குமாருக்கும் சண்டை ஏற்பட்டது.

ஆனால் எனது நட்பை மீறி கவுதம், மதன்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டார். எனக்கு கவுதம் மீது வருத்தமும், கோபமும் ஏற்பட்டது. அவரை போட்டுத்தள்ள முடிவு செய்தேன். என் நண்பர்களோடு சேர்ந்து கொலைத்திட்டம் தீட்டினேன். நித்யானந்தத்தை செல்போனில் பேச வைத்து, கவுதம் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டோம். கவுதம் திருவான்மியூர் திருவள்ளுவர் சாலையில் இருப்பதாக தெரிவித்தார். உடனடியாக நாங்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கவுதமை தீர்த்துக்கட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டோம்.

இவ்வாறு கமலேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

வக்கீல் கவுதம் படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்