பாமாயில் மற்றும் துவரம் பருப்பை பொதுமக்களுக்கு துரிதமாக வழங்கிட அறிவுறுத்தல்

பச்சை, புழுங்கல் அரிசியை கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update:2024-06-19 20:24 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆகியவற்றின் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் வரைவு மானியக் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன்படி, கே.எம்.எஸ். 2023-24-ம் கொள்முதல் பருவத்திற்கான நெல் மணிகளை தடங்கலின்றி விவசாயிகளிடமிருந்து விரைவில் கொள்முதல் செய்து அதற்கான ஊக்கத்தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தி அரவை ஆலைகளுக்கு அனுப்பி தரமான அரிசி நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கிடங்குகளில் போதுமான அளவு பச்சை, புழுங்கல் அரிசி இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

நவீன அரிசி அரவை ஆலைகளில் அரைக்கப்படும் அரிசியில் கருப்பு மற்றும் பழுப்பு நீக்கம் செய்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் மூலம் தரத்தினை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது. சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டு வரும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு இருப்பு அளவினை கேட்டறிந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு துரிதமாக வழங்கிட அறிவுறுத்தப்பட்டது.

நியாயவிலைக் கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டு, விநியோகிக்கப்படும் பொருட்களின் தரத்தினை உறுதி செய்து குடும்ப அட்டைதாரர்களின் நலனை உறுதி செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன. அரிசிக் கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுடன் இணைந்து செயல்பட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் ஹர் சஹாய் மீனா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிர்வாக இயக்குநர் எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் ஆ.அண்ணாதுரை, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறைத் தலைவர் க.ஜோஷி நிர்மல் குமார்,மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்