2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை

2026-ல்,தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-22 22:12 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில், திராவிடக் கட்சிகள் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணி, மிகவும் பலமான சக்தியாக உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 68,045 பூத்களில் 7,174 பூத்களில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி முதலிடத்தைப் பிடித்தது. 18,086 பூத்களில் நமது கூட்டணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத கூட்டணியை அமைத்து, தமிழகத்தில் 37 சதவீத பூத்களில், நாம் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், இதுவே நமது வெற்றிக்கு முதல் படி. 

தி.மு.க. ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம் என, பொதுமக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது வெறுப்படைந்து இருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு திராவிடக் கட்சிகளும், பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. பாஜக, தமிழகத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, 18 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பா.ஜ.க. தனித்து 11 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து நம் உழைப்பை வழங்கும்போது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும், நமது தேசிய ஜனநாயக கூட்டணி பெருவெற்றி பெறும். தமிழக மக்கள் பேராதரவோடு, வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் நிச்சயம் நமது ஆட்சி மலரும். அந்த இலக்கினை நோக்கி, நாம் தொடர்ந்து உழைப்போம். நிச்சயம் வெல்வோம். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்