பார்முலா 4 கார் பந்தயம்: விபத்து காரணமாக முதல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

விபத்து ஏற்பட்டதன் காரணமாக பார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் போட்டி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Update: 2024-09-01 12:14 GMT

சென்னை,

இந்த ஆண்டுக்கான பார்முலா4 கார்பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்று போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை தீவு திடலை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சாலை பந்தயத்திற்கான ஓடுதளமாக மாற்றப்பட்டது. தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்டீரிட் சர்க்யூட்டில் நடக்கும் இந்த போட்டிக்காக இரவிலும் பகல்போல் ஜொலிக்கும் வகையில் இருபுறமும் மின்னொளி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்களுக்காக சுவாமி சிவானந்தா சாலையில் 5 இடங்களில் பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்பட்டன. பிற்பகல் 2.30 மணிக்கு பயிற்சியுடன் போட்டியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ரேஸ் நடத்துவதற்கான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (எப்.ஐ.ஏ.) தரச்சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பிற்பகலில் நடக்க இருந்த பயிற்சி, தகுதி சுற்றும் அனைத்து ஒத்திவைக்கப்பட்டது.

மாலையில் எப்.ஐ.ஏ. அனுமதி சான்றிதழ் முறையாக கிடைத்தபின் பயிற்சி சுற்றுகள் மட்டும் நடத்தப்படும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இரவு 7.10 மணிக்கு அண்ணா சாலையில் போட்டியின் தொடக்க விழா நடந்தது. இரவு 9 மணிக்கு பிறகு ஜே.கே. எப்.எல்.ஜி.பி., இந்தியன் தேசிய லீக் (ஐ.ஆர்.எல்.), பார்முலா4 கார்பந்தய டிரைவர்கள் பயிற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

இந்த சூழலில் இன்று காலை தகுதி சுற்று மற்றும் இரவில் பார்முலா 4 கார் பந்தயங்கள் நடைபெற உள்ளன. இதன்படி பார்முலா 4 கார் பந்தய பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டியின் கடைசி சுற்றில் 2 கார்கள் மோதிக் கொண்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. கடைசி சுற்று வரை முன்னிலை வகித்த வீரர் டில்ஜித் என்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

கார் பந்தயத்தை நடிகர் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டுகளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்