தமிழ்நாட்டில் தொடர் தோல்வி கண்ட பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

எல்லாருக்குமான அரசாக இருப்பதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-07-11 06:46 GMT

தருமபுரி,

முதல்-அமைச்சரின் முகவரி துறையின் கீழ் 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தை கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் 18-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த திட்டம், நகர்ப்புறங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. அதற்காக நகர்ப்புறங்களில் ஒவ்வொரு வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அரசின் 15 துறைகளின் கீழ் உள்ள 44 சேவைகள் பொதுமக்களுக்கு மிக எளிதாக வழங்கப்பட்டன.

அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைத்ததால் பொதுமக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த முகாம்கள் மூலம் மொத்தம் 8 லட்சத்து 74 ஆயிரம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த சூழ்நிலையில், ஊரக பகுதிகளிலும் 'மக்களுடன் முதல்வர் திட்டம்' செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி தவிர தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த முகாம் இன்று தொடங்கியது.

இந்த திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அதற்கான விழா, நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் யாருக்கும் எந்த குறையும் இல்லாத வகையில் செயல்பட்டு வருகிறோம். 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் 8 லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அனைவர் வீட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்று பணியாற்றுகிறோம்.

தருமபுரி அரூர் அரசு மருத்துவமனையில் ரூ.51 கோடியில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பஞ்சப்பள்ளி அலியாளம் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும். சிட்லிங், சித்தேரி கிராம மக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட தொழில்கள் ஏற்படுத்தப்படும். தீர்த்தமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தோல்வி கண்ட பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசு விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயல்பட வேண்டும். எல்லாருக்குமான அரசாக இருப்பதுதான் எங்கள் தேர்தல் வெற்றியின் ரகசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்