என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக்கல்வி இயக்கக ஆணையர் வெளியிட்டார்.

Update: 2024-07-10 05:34 GMT

கோப்புப்படம் 

சென்னை,

2024-25-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ம்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஜூன்) 6-ம்தேதியுடன் நிறைவு பெற்றது. பின்னர், மேலும் அவகாசம் கேட்டு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கடந்த மாதம் 10 மற்றும் 11-ம்தேதிகளில் விண்ணப்பப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்ததாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்தது. விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், அவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருந்தனர்.

இந்த நிலையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் கடந்த மாதம் 12-ம்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13-ம்தேதி முதல் 30-ம்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி, விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக்கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் இன்று வெளியிட்டார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் என்ஜினீயரிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர்.

மேலும் கலந்தாய்வு குறித்த அட்டவணையும் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 29-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் என்ஜினீயரிங் படிப்புக்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 8-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்