சீரான ரெயில் போக்குவரத்து... சென்னையில் 2 வாரங்களுக்கு பின் மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கம்

கடந்த 2 வாரங்களாக மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2024-08-18 07:26 GMT

சென்னை,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள் மற்றும் இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தாம்பரம் ரெயில் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை தாம்பரம்-பல்லாவரம் இடையே பல மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

ரெயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன. கடந்த 2 வாரங்களாக மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மின்சார ரெயில்கள் மட்டுமின்றி விரைவு ரெயில்களும், தாம்பரத்தில் நிற்கவில்லை.

தாம்பரம் ரெயில்வே பணிமனையில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. நாளை (19-ந்தேதி) முதல் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அதிகாரிகள் முன்னதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், ரெயில் போக்குவரத்து தற்போது சீராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் வழக்கம் போல் உள்ள கால அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாம்பரத்தில் இன்று முதல் மின்சார ரெயில்கள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழக்கம் போல நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ரெயில் போக்குவரத்து சீராகியுள்ளதால், ரெயில் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

 

 

 

Tags:    

மேலும் செய்திகள்