விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை - பலத்த போலீஸ் பாதுகாப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (சனிக்கிழமை) எண்ணப்படுகின்றன.

Update: 2024-07-12 15:52 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

இத்தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 95,536 ஆண் வாக்காளர்களும், 99,944 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 15 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.48 ஆகும்.

இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 6 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும். காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

அதுபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறை, வேட்பாளர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் வாகனம் மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும். சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். இவை அங்குள்ள தனி அறையில் போடப்பட்டுள்ள 2 மேஜைகளில் எண்ணப்படும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படுவதோடு வீடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்பட உள்ளது. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மைய நுழைவுவாயிலில் சோதனை செய்யப்பட்டு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.

வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர், கழிவறை, மின்விசிறி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது தடையில்லா மின்சார வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும், 2-வது அடுக்கில் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 3-வது அடுக்கில் வாக்கு எண்ணும் மைய நுழைவுவாயில் பகுதியில் உள்ளூர் போலீசாரும் என 150 பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 பிரிவாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்? என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்