விமான சாகச நிகழ்ச்சி: அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.;
சேலம்,
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. கூட்டநெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினார்கள். தமிழ்நாடு அரசு தக்க ஏற்பாடுகள் செய்திருந்தால், இவ்வளவு பெரும் சேதம் ஏற்பட்டு இருக்காது. தமிழ்நாடு அரசின் செயலற்றத்தன்மையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திட்டமிட்டு முன்கூட்டியேஅடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுத்திருக்க வேண்டும்.
அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினைக்கக்கூடாது. மக்களை பாதுகாப்பது அரசின் கடமை. இது உளவுத்துறையின் தோல்வி. இதைச் செய்யத் தவறியது திமுக அரசு. அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக அரசியல் செய்யவில்லையா? இந்த உயிரிழப்புகளுக்குக் திமுக அரசே காரணம். இழப்பீடுகள் எந்த வகையிலும் போதாது. விலைமதிப்பற்ற உயிர்களுக்கு அவை எவ்விதத்திலும் ஈடாகாது. இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.