ராயப்பேட்டை கோவிலை சுற்றி மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ள தடை- ஐகோர்ட்டு உத்தரவு
ராயப்பேட்டை கோவிலை சுற்றி மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
சென்னை ராயப்பேட்டை ஒயிட் சாலையில் உள்ள ஸ்ரீரத்தின விநாயகர் கோவில் கோபுரத்தை அகற்றி, மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு தடை கேட்டும் சென்னை ஐகோர்ட்டில், ஆலயம் காப்போம் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐகோர்ட்டு முதல் பெஞ்ச் நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.ரவி, இந்த ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தை மாற்றி அமைத்து, கோவில் கோபுரத்தை இடிக்காமல் திட்டம் உருவாக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி, இதுகுறித்து நிபுணர்கள் அறிக்கை கேட்டுள்ளது. ஆனால், அந்த கோவிலுக்கு நேரில் சென்றபோது, மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக கோவிலை சுற்றி பூமிக்கு அடியில் துளையிடும் பணி இடைவிடாது நடந்துக் கொணடிருந்கிறது'' என்று வாதிட்டார்.
மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில், ''கோவில் முன்பாக வருகின்ற மெட்ரோ ரெயில் நிலையத்தின் வாயிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக .ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த நிபுணர் குழு மாற்று வழிகளை ஆராய்ந்து சமர்ப்பிக்கும் அறிக்கையினை விரைவில் தாக்கல் செய்கிறோம்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யும் வரை கோவிலை சுற்றி துளைபோடும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.