ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தி.மு.க. அரசு தனது ஆட்சியை வெகு விரைவில் இழக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-16 16:30 GMT

கோப்புப்படம்

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். அப்போதே, உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இந்த கொலை வழக்கின் விசாரணை கைதியான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் 'அரசியல் தொடர்பு இல்லை' என்று சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தாலும், திருவேங்கடம் சுட்டு கொல்லப்பட்டிருப்பதை பார்க்கும்போது அரசியல் தலையீடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கொலைகாரர்களின் கூடாரமாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

மக்கள் விரோத கொடுங்கோல் ஆட்சி, குடும்ப ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க. அரசு தனது ஆட்சியை வெகு விரைவில் இழக்கும். எனவே இந்த கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் வகையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்