வெளிநாடு சென்ற அண்ணாமலை: கட்சி பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
தமிழகத்தில் கட்சி பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, அண்ணாமலை லண்டனில் படிக்க சென்று உள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை, வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார்.
அண்ணாமலை வெளிநாடு சென்ற நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைமை, தமிழகத்தில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளது.
தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் செயல்படும் இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர்கள் சக்ரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், ராமசீனிவாசன், பொருளாளர் ஆர்.எஸ்.சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அண்ணாமலை தமிழகம் திரும்பும் வரை இந்த குழுவினர் கட்சி செயல்பாடுகளை ஒருங்கிணைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.