குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி

அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்.;

Update:2024-07-31 08:29 IST

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 28-ந் தேதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு குறைந்ததும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் மழை தொடர்ந்து நீடித்ததால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் 3-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதுபோல் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது.

இந்த நிலையில், மழை குறைந்து நீர்வரத்து சீராக இருப்பதையடுத்து குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்