பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி.. அடுத்து நடந்த பரபரப்பு
காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர்.
சேலம்,
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவர், தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், சின்னதிருப்பதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அந்த பெண் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் அரியானூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதேசமயம், கல்லூரிக்கு சென்ற மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் தரப்பில் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், காதல் திருமணம் செய்த ஜோடியை நேற்று அஸ்தம்பட்டி போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு இருவீட்டாரின் பெற்றோரை போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெற்றோருடன் செல்வதற்கு கல்லூரி மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீசார் இருக்குமாறு தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, மாணவியை திருமணம் செய்த கல்லூரி மாணவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், காதல் திருமணம் செய்த அந்த பெண்ணுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவன் மற்றும் மாணவி ஆகியோரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.