இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 2 பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைது செய்தனர்.;

Update:2024-06-14 03:30 IST

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் சம்பவத்தன்று கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மீன்பிடித்த பகுதியில் படகு என்ஜின் பழுதடைந்து 2 மீனவர்கள் தவித்து கொண்டிருந்ததைபார்த்து இருவரையும் தங்கள் படகில் மீட்டு கரை சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வரலெட்சுமி உள்பட போலீசார் அவா்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் இலங்கை யாழ்பாணம் அனலைத்தீவு பகுதியை சேர்ந்த மைக்கேல் பெர்னாண்டோ(வயது 44), விஜயகுமார்(37) ஆகியோர் என்பதும், அவா்கள் கடந்த 10-ந் தேதி மாலை பைபர் படகில் மீன்பிடிக்க வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் வந்த பைபர் படகின் என்ஜின் பழுதாகி காற்றில் அடித்து வரப்பெற்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே கடலில் நின்று போனதாகவும், படகில் இருந்த நங்கூரம் சிறியதாக இருந்ததால் படகில் உள்ள என்ஜினை கழற்றி கடலில் இறக்கி படகை நிறுத்தியதாகவும் தெரிவித்தனா். இதனையடுத்து அவர்கள் இருவரையும் கடலோர காவல் குழும போலீசார் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து இலங்கை மீனவர்கள் 2 பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்