18 ஆயிரம் உதவி லோகோ பைலட்கள் தேர்வு - ரெயில்வே வாரியம் முடிவு

மேற்கு வங்க விபத்து எதிரொலியை தொடா்ந்து நாடு முழுவதும் 18 ஆயிரம் உதவி லோகோ பைலட்களை ரெயில்வே வாரியம் தேர்வு செய்கிறது.

Update: 2024-06-21 21:56 GMT

கோப்புப்படம்

சென்னை,

மேற்கு வங்காளம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணிகள் விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரி ரெயில் நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதியது.

இந்த ரெயில் விபத்தை தொடர்ந்து ரெயில்வே வாரியம் புதிதாக 13 ஆயிரம் உதவி லோகோ பைலட்கள் (ரெயில் என்ஜின் டிரைவர்) பணியமர்த்த உள்ளது. இதுதொடர்பாக 16 மண்டல ரெயில்வே பொது மேலாளர்களுக்கும் ரெயில்வே வாரியம் ஒரு புதிய வழிகாட்டுதல்களை அனுப்பி உள்ளது.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் ரெயில்வே வாரியம், அனைத்து மண்டலங்களிலும் மொத்தமாக 5 ஆயிரத்து 696 உதவி லோகோ பைலட்டுகளை பணிக்கு அமர்த்த ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்த எண்ணிக்கை 3.3 மடங்கு உயர்த்தி மொத்தமாக 18 ஆயிரத்து 799 உதவி லோகோ பைலட்டுகளை பணிக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதில் தெற்கு ரெயில்வேயின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 218 உதவி லோகோ பைலட்களை பணிக்கு அமர்த்த ஒப்புதல் தெரிவித்திருந்தது. தற்போது 726 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெயில் விபத்து மற்றும் லோகோ பைலட்களில் தொடர் புகார்களின் எதிரொலியாக உதவி லோகோ பைலட்கள் பணியிடங்களை அதிகரிக்க ரெயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதிதாக உதவி லோகோ பைலட்டுகளை வேலைக்கு அமர்த்துவதற்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்கும் படி ரெயில்வே வாரியம் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் புதிதாக ஆட்களை தேர்வு செய்து, பல்வேறு நடைமுறைகளை முடித்து பணியில் அமர 6 மாதங்கள் ஆகும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்